பாலையில் வந்திறங்குகிறது
வெட்கம் தோய்ந்த
வார்த்தைகளை சுமக்கும் கடிதம்.
மணல்காற்றில் நிலைகுலையும்
ஒட்டகத்தின்
மூச்சித்திணறல் எனக்குள்.
வாழைமரத்து விழுதுகளில்
பூப்பெய்துகின்றன
வெட்கமும்
பரிமாறதடுமாறும் வார்த்தைகளும்.
தயக்கத்தின் காட்டாறு
எனக்கேயெனக்கான
உன் கன்னங்களை
உன் உதடுகளை
உன் மூக்கு காதுகளை
உன் விருப்பதிற்கு
வளையாத தலைமுடியை
படுக்கைகளை ஈரமாக்கும்
உன் இரவுகளை கலைத்துவிடாமல்
உடைமாற்றி விடுவதை
என் மூச்சை சுவாசித்தபடி
பூனைக்குட்டியாய்
என் மடியில் படுத்துறங்கும்
உன் லாவகத்தை
இடம் பெயர்க்குகிறது
என்னிலிருந்து.
பாலையின் அடியில் புதையும்
தீ பிழம்பில்
எனக்கான கருணையை
எனக்கான நம்பிக்கைகளை
எனக்கான ரகசிய திறவுகோலை
எனக்கான பிரமிடுகளை
எனக்கான தின்பண்டங்களை
எரித்துகொண்டிருக்கிறாய்.
என் மனச்சித்திரத்திலிருந்து
உதிர்ந்தபடியிருக்கிறது
உன் வண்ணத்தின் மணல்கள்.
மணலற்ற பாலையை கைகாட்டுகிறாய்.
இளமையின் தீப்பந்தகானல்
தலைவிரித்தாடுகிறது
அருவெறுப்புடன் அணுகுகின்றன
கானல் பருகும் ஒட்டகங்கள்.
பேராசையில் நான் கோரி குடிக்கும்
உன் அன்பை
சிதைத்தபடி சிதறிக்கிடக்கின்றன
வெட்கம் தோய்ந்த
உன் கடிதத்தின் வரிகள்.
என் வருகையை
உன் புதிய விளையாட்டுக்கான
பொம்மையைபோலவே
எதிர்கொள்ளும் அவநம்பிக்கையின்
ஓவியங்களை
நானே களைந்தெறிகிறேன்.
எனக்கே எனக்கான
கடவுளை
மணற்சரிவில் தவறவிடுகிறேன்.
பொம்மையில்லையென்பதற்காக
பூப்பெய்திய பொம்மை நீ.
மனவெளியில்
நீ சுழன்றுகொண்டிருக்கிறாய்
ஒரு பிளாஸ்டிக் பம்பரமாய்.
